Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வானிலும் ஒலிக்கும் தமிழ் மொழி – அரசு பள்ளி மாணவனின் கனவு நனவாகிய தருணம்

மேலே பறக்கும் விமானத்தை இன்றளவும் ஒரு ஏக்கத்துடன் பல மக்கள் பார்த்து வருகின்றனர். என்றாவது ஒருநாள் நாம் இதில் பறக்க மாட்டோமா என்பது அவர்களின் கனவு. விமானங்கள் மீதான பிரியம் நம் அனைவரிடமும் இருக்கும். செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதன் ஒலி கேட்ட உடனேயே நம்முடைய கண்கள் தானாகவே மேல் நோக்கி சென்று விடும். அப்படி சிறுவயதிலிருந்து விமானத்தின் மீது கொண்ட பிரியத்தால் விடாமுயற்சியுடன் அரசு பள்ளியில் படித்தாலும் கூட விமானியாகி தமிழ் மொழியில் பேசி பல பயணிகளின் மனம் கவர்ந்து வருகிறார் இந்த இளைஞர்! யார் இவர்? இவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை பதிவிடுகிறது திருச்சி விஷன் குழுமம்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பைலட்டாக பணியாற்றி வருபவர் ப்ரிய விக்னேஷ். கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தினை இயக்கினார். அப்போது கொஞ்சும் தமிழில் நாம் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அந்த இடத்தின் சிறப்புகளையும், குறிப்பாக திருச்சி பற்றி அவர் எடுத்துக் கூறிய விதமும் அழகாக தமிழில் உச்சரித்து விவரிக்கும் இவருடைய குரலினை பயணி ஒருவர் படம் பிடித்தார்.

இது தொடர்பாக பைலட் ப்ரிய விக்னேஷை தொடர்பு கொண்டு பேசினோம். நான் தேனி பக்கத்தில் சிறிய கிராமத்தில் பிறந்தேன். பின் அம்மா அப்பாவிற்கு வேலை கிடைத்தவுடன் சென்னைக்கு வந்து விட்டோம். இங்கு ராயபுரத்தில் வள்ளல் அழகர்சாமி செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். லயோலா கல்லூரியில் இளங்கலை வரலாறு படிக்க ஆரம்பித்தேன். அதே சமயத்தில் மெட்ராஸ் லயன்ஸ் கிளப்பில் பைலட் ட்ரெயினராகவும் சேர்ந்தேன். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து பண நெருக்கடியுடன் வங்கிகளில் கடன் வாங்கி படிப்பை தொடர்ந்தேன். பின்பு அகமதாபாத்தில் தனியார் பிளைட் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன். தற்போது நான் பறக்கும் இந்த விமானத்தை இயக்க தாய்லாந்தில் உள்ள பேங்காக்கில் பயிற்சி பெற்றேன். ஒரு வருடத்திலேயே எனக்கு இண்டிகோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது 2018ம் ஆண்டு அங்கு சேர்ந்தேன். தற்போது இரண்டு வருடமாக துணை விமானியாக இண்டிகோ நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.

விமானத்தில் தமிழ்மொழி அறிவிப்பு என்பது எந்த விமானத்திலும் ஒரு தடை அல்ல. அதேசமயம் ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் பேசினாலும் கட்டாயமும் அல்ல. அது ஒவ்வொரு விமானியின் தனிப்பட்ட விருப்பத்தினாலும் ஆர்வத்தினாலும் செய்யும் ஒன்று. நாங்கள் தற்போது தென்னக பகுதியான தமிழகத்தில் அதிகமாக பறப்போம். இங்கு முழுக்க முழுக்க 90% பேர் நம்முடைய தமிழர்களாக இருப்பதால் ஆங்கிலத்தில் கொடுக்கிற அறிவிப்பை தமிழிலும் கொடுக்கலாம் என்று நினைத்தேன். இதற்கு என்னுடைய நிறுவனம் ஒத்துழைப்பு கொடுத்தது. அறிவிப்பு கொடுக்கும்போது நாம் செல்லும் வழியில் உள்ள சுவாரசியங்கள், தெரியும் முக்கியமான இடங்கள் இவற்றை மேலிருந்து பார்க்கும்போது ஒரு சந்தோசமாக இருக்கும்.ஒரு சின்ன விண்டோவில் இருந்து பார்க்கும்போது பயணிகள் இதையெல்லாம் பார்க்க தவறி விடுவார்கள். அதனால ஒரு சிறிய அறிவிப்பு கொடுக்கும் போது அவர்களுடைய பயணம் சுவாரசியமாக இருக்கும்”. என்றார்

மேலும் “சிறுவயதாக இருக்கும்போதே விமானியாக வேண்டும் என்கிற ஆசை. என்னுடைய அம்மா அதற்காக என்னை ஊக்கப்படுத்தி வந்தார். காகம், குருவி போல இதுவும் பறக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். என்னுடைய அம்மா அது ஒரு வாகனம் அதில் பைலட் ஒருவர் ஓட்டுகிறார் என்றார். அப்போதுதான் அதை ஓட்டுபவர் நானாக இருக்க வேண்டும் என நினைத்தேன். சிறு வயதில் என்னுடைய அம்மா என்னை ஒரு விமானியாக சித்தரித்து வளர்த்து வந்தார். அதனால் இந்த வேலையைத் தவிர என்னால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. ‌

மற்ற நாடுகளைப் பொறுத்தவரை அந்தந்த நாடுகளுக்கு ஒரு மொழி இருக்கும் ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை பலமொழிகளில் சூழப்பட்ட நாடு. மொழி அடிப்படையில் ஒரு விமானியை அல்லது விமான பணிப்பெண்களை தேர்வு செய்ய மாட்டார்கள். ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று அவருடைய திறனை மேற்கொண்டு தான் தேர்வு செய்வார்கள். அதுபோல நாடுமுழுவதும் உள்ள திறமையானவர்களை தான் தேர்வு செய்வார்கள். எனவே தமிழில் அறிவிப்பு கொடுப்பது என்பது மற்ற விமானிகளுக்கு சிரமமாகத்தான் இருக்கும். நானும் பல பயணிகளுக்கு தமிழில்… வணக்கம், நன்றி போன்ற வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து வருகிறேன். எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தமிழில் பேசுகிறேன்” என்றார்

விமானத்தில் பணிபுரியும் நம்முடைய தமிழ் பயணிகளுக்காக தன் குரலை வானில் பறந்து கொண்டே தமிழில் அறிவிப்பு கொடுத்து தமிழ் மொழியை வான் உயரத்துக்கு கொண்டு சேர்த்து வருகிறார் துணை விமானியான ப்ரிய விக்னேஷ்.

https://youtu.be/s4fyYOkgTd0


slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *