திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்காலுக்கு இன்று 06880 எண் கொண்ட பாசஞ்சர் ரயிலானது காலை 08:25 மணிக்கு புறப்பட்டது. பயணிகள் டெமோ ரயில் முன்பக்கம் இஞ்சினோடு பின்பக்கம் இன்ஜினையும் சேர்த்து மொத்தம் எட்டு பெட்டிகளுடன் சென்றது. இந்த ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் 09:00 மணிக்கு இரண்டாவது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.
அப்போது பின்பக்க பொருத்தப்பட்டிருந்த ரயில் இன்ஜினின் காட் பெட் பெட்டியில் திடீரென அதிக அளவில் புகை வந்தது. உடனடியாக இந்த ரயிலின் இஞ்சின் ஓட்டுநர் கீழே இறங்கி ரயிலில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டார். மேலும் ரயில் பெட்டியில் இருந்து அனைத்து பயணிகளை வெளியேறும்படி ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து ரயிலில் பயணித்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்களை வேளாங்கண்ணிக்கு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்றி அனுப்பியதோடு இச்சம்பவம் குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் ரயில் இன்ஜினில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர்.
இதனை தொடர்ந்து பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ரயில்வே தொழில் நுட்ப வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயில் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்ததற்குரிய காரணம் என்ன என்று ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments