திருச்சி மாநகராட்சியில் இன்று முதல் முறையாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் தற்போது துரிதமாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் முன்னிலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி பல்வேறு வார்டுகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் பகுதி கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் பல தரைக்கடை வியாபாரிகளிடம் மாநகராட்சியின் பெயரை கூறியும், காவல்துறையின் பெயரை கூறியும் பலர் பணமாகவும், பொருளாகவும் வசூல் நடத்தி வருகின்றனர். எனவே அவற்றை தடுக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் மேயராக இருந்த பொழுது தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அது நடைமுறையில் இல்லாததால் இதுபோன்ற புகார்கள் வருகிறது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என முன்னாள் மேயர் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments