திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுரங்கபாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேம்பாலம் அமைத்து தர வலியுறுத்தியும் திங்கட்கிழமை தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆய்வுக்கு சென்ற சிறப்பு இரயிலை மறித்து பொதுமக்கள் மனு கொடுக்க சென்றதால் சுமார் 1 மணி நேரம் இரயில் பாதையில் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை அடுத்த கத்திக்காரன்பட்டியில் தற்போதுள்ள இரயில்வே கேட்டில் (எல்.சி.270) இரயில்வே நிர்வாகம் கேட்டின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக சுரங்கபாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே மணப்பாறை, சின்னசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் இரயில்வே சுரங்கப்பாதைகள் மக்கள் பயன்பட்டிற்கு இல்லாமல் தண்ணீர் தேங்கி நின்று ஆபத்தை விளைவிக்கும் விதமாக இருப்பதால் தங்களது பகுதியில், சுரங்க பாதை அமைப்பதை தவிர்த்து, மேம்பாலம் அமைத்து தர வலியுறுத்தி கத்திக்காரன்பட்டி பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் இரயில்வே மதுரை கோட்ட பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் வருவாய்த்துறையினர் சம்பந்த கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதால் தங்களது பகுதிக்கு சுரங்க பாதை வருவதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மணப்பாறை பகுதிக்கு ஆய்விற்கு வந்திருந்த தென்னக இரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் சிறப்பு ஆய்வு இரயிலை தடுத்த நிறுத்தி மனு அளிக்க அப்பகுதி பொதுமக்கள் திட்டமிட்டு சம்பந்தப்பட்ட இரயில் கேட்டில் குவிந்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற திண்டுக்கல் இரயில்வே போலீஸார் பொதுமக்களை சமரசம் செய்தும், தண்டவாளத்தை விட்டு பொதுமக்கள் விலகவில்லை.
இரயில் பாதையிலேயே அமர்ந்துக்கொண்டனர். இதனால் பொது மேலாளர் சிறப்பு ஆய்வு இரயில் மணப்பாறையிலேயே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் சேக்கிழார் தலைமையிலான வருவாய்துறையினர், காவல் ஆய்வாளர் சு.கருணாகரன் தலைமையிலான மணப்பாறை போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று வருவாய்துறையினரின் அறிக்கை அப்பகுதிக்கு சுரங்கபாதை அமைக்க உகந்தது அல்ல என்று தான் அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாகவும், இரயில்வே நிர்வாகத்தின் அறிக்கையிலும் அப்பகுதிக்கு சுரங்கபாதை அமைக்கவில்லை என்றும் இருப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments