Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இன்று சர்வதேச போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம்

விமானங்கள் பாதுப்பாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏ.டி.சி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் 20ம் தேதி உலக வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதன் ‘சக்கரம்’ கண்டுபிடித்த காலம் தொடங்கி, பயணம் என்பது மனித வாழ்வின் பரினாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளது அனைவரும் அறிந்ததே. 

முன்னொரு காலத்தில் மனிதன் காலால் நடந்து பெயர்ந்தது தொடங்கி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புறநானூற்றின் “வலவன்  ஏவா வானூர்தி “எனும் கூற்றுக்கிணங்க ஆளில்லா தானியங்கி விமானங்களின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆரம்ப காலங்களில் வான் வழிப்பயணம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே என்ற நிலை மாறி இன்று சாமானிய மக்களும் தாம் விரும்பிய இடங்களுக்கு சில மணி நேரத்தில் சென்றடையக்கூடிய அளவிற்கு கடந்த சில ஆண்டுகளில் முன்னேறியுள்ளது. நாள்தோறும் இன்று இலட்சக்கணக்கானோர் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது எவ்வாறு சாத்தியமாகின்றது என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. வான் போக்குவரத்து என்பது மற்ற அனைத்து விதமான போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் சற்றே வேறுபட்டதாகும்.

உதாரணமாக, வாகனங்களையோ, இரயில்களையோ அல்லது கப்பல்களையோ நெரிசல் ஏற்படும் நேரங்களில் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க இயலும். ஆனால் விமானத்தை பொறுத்த வரையில் இது சாத்தியமில்லாத ஒன்று. விமானம் பூமியின் புவியீர்ப்பு சக்தியை மீறி பறப்பதற்கு எரிபொருள் உதவியுடன் பறக்கின்றது. மேலும் பறப்பதற்க்கு தேவையான எரிபொருளை எடுத்து செல்வதில் எடை, பயண தூரம், பயணிகளின் எண்ணிக்கை, சரக்குகளின் எடை என பல்வேறு வரம்புகள் உள்ளன.இதனால் ஓர் இடத்தில் இருந்து புறப்படும் விமானமானது ஓர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பத்திரமாக தரையிறக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும் வானில் பறக்கும் விமானத்தின் வேகம் சராசரியாக நிமிடத்திற்கு 8 முதல் 12 கி.மீ வரை உள்ளதாலும், பரந்து விரிந்த வானில் ஒரு சேர பல விமானங்கள் பறக்கும் சூழ்நிலை உள்ளதாலும் வான் வழிபோக்குவரத்து என்பது சற்றே சவாலானதாகும். விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் விமானியை தான் முழுமையாக நம்பி உள்ளனர். இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலில் விமானிகள் நம்புவது ஏர் டிராபிக் கண்ட்ரோலர் (ஏ.டி.சி) எனப்படும் வான் போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டாளர்களை தான். உலகின் அனைத்து விமான நிலையங்களிலும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவு கட்டாயம் இருக்கும். இங்கு அமர்ந்து கொண்டுதான் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமான நிலையங்களிலும், வானத்திலும் விமானிக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். 

கட்டுப்பாட்டு அதிகாரிகளின் முதன்மை குறிக்கோள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் காப்பதாகும். மேலும் விமானங்கள் குறித்த நேரத்தில் பயண இலக்கை அடைவதிலும், போக்குவரத்து சீராவதிலும், இடர்பாடுகள் அல்லது பாதகமான சூழ்நிலைகளில் இருந்து மீட்பதிலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளிலும் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பணியானது அளப்பெரியது. விமானத்தை எப்பொழுது இயக்க வேண்டும்? எப்பொழுது தரையிறக்க வேண்டும்? எப்பொழுது ஓடுதளத்தை பயன்படுத்த வேண்டும்? எந்த வேகத்தில் விமானத்தை இயக்க வேண்டும்? எவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும்? என்பவை போன்ற பாதுக்காப்பு குறித்த அனைத்து செயல்படுகளுக்கும் விமானியானவர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியின் அனுமதி பெற்ற பின்னரே இயக்க முடியும் என்பது விதி. 

இதற்காக “ரேடார்” போன்ற பல தொழில்நுட்பக் கருவிகளின் துணை கொண்டு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். தரைக்கட்டுப்பாடு, டவர் கட்டுப்பாடு, புறப்பாடு கட்டுப்பாடு, ஏரியா கட்டுப்பாடு என நான்கு பிரிவுகளின் கீழ் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். விமானியும் கட்டுப்பாட்டாளரும் ரேடியோ அலைவரிசையில் தொடர்பில் இருந்து கொண்டே இருப்பர். விமானி விமானத்தை இயக்குவதற்கு முன் தரை கட்டுப்பாட்டு அதிகாரியிடம் அனுமதி கோருவார் இவர் விமானம் புறப்படும் போது எந்தவொரு பொருளோ வாகனமோ மோதாவாறு ஓடுதளத்தை பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்கிறார். 

பின்னர் விமானியுடனான தொடர்பு டவர் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் மாற்றப்படுகிறது இவர் ஓடுதளம் பறப்பதற்கு ஏதுவாக உள்ளதா என சோதித்து விமானியை வழி நடத்துவார் பின் விமானியுடனான தொடர்பு புறப்பாடு கட்டுப்பாட்டு அதிகாரியிடம் மாற்றப்படுகிறது. இவர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களை வருகை தரும் விமானங்களிடம் இருந்து பத்திரமாக பிரித்து அந்தந்த இலக்க நிலையங்களுக்கு ஏற்ப வான் வழி தடங்களில் அனுப்பி வைப்பார். பின்னர் விமானியுடனான தொடர்பு ஏரியா கட்டுப்பாட்டு அதிகாரியிடம் மாற்றப்படுகிறது. இதன் பின் விமானி அந்தந்த இலக்க விமான நிலையங்களுக்கு வழிநடத்தப்படுகிறார். பின்னர் மேற்கூறிய முறைப்படி பாதுகாப்பாக தரை இறங்க வழிநடத்தப்படுகிறார். வான் போக்குவரத்து கட்டுப்பாடு என்பது தவறுகளுக்கு இடம் கொடுக்க முடியாத மிகவும் பொறுப்பான பணி.

விதிகளை சரியாக புரிந்துணர்த்து சூழ்நிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப விமானிகளை வழிநடத்த வேண்டிய கடமை ஒவ்வொரு கட்டுப்பாட்டு அதிகாரிக்கும் உள்ளது. பல குழப்பமான மற்றும் சிக்கலான சூழ்நிலைகளில் சரியான முடிவினை சரியான நேரத்தில் எடுப்பவர்களே வான் போக்குவரத்து அதிகாரிகள். இத்துறையில் பணிப்புரிவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தி வரும் எழுத்து தேர்வில் தகுதி பெறவேண்டும். பி.எஸ்.சி (கணிதம், இயற்பியல்) மற்றும் பொறியியல் பட்டதாரிகள்  இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த பணியைப்பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் மிகவும் குறைவாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து 5% கும் குறைவான நபர்களே அதிகாரிகளாக தேர்வாகி பணிபுரிந்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்று.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்குனர் செந்தில் வலவன் ஒரு வான் போக்குவரத்து அதிகாரியாக தனது சேவையை தொடங்கியவராவார். இவர் நாட்டின் பல முன்னணி விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், பின்னர் பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் பல இளம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை சர்வதேச வான் போக்குவத்துக் கட்டுப்பாட்டாளர் தினத்தை முன்னிட்டு பயணிகளிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்பதும் விதமாக பல்வேறு எண்முறை பதாகைகள் மூலமும், நிகழ்ச்சிகள் மூலமும் விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *