Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழத்தின் தலைநகருக்கு திருச்சி தான் சரியான இடம்: அமைச்சர் துரைமுருகன் அதிரடி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருச்சியில் 100 அடி உயர கம்பத்தில், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஆயிரம் கொடிகள் இருந்தாலும், தி.மு.க., கொடியை போல் கம்பீரம் வேறு எந்தக் கொடிக்கும் இருக்காது. கருணாநிதியின் ரத்ததில் உருவானது இந்தக் கொடி. இந்த நிகழ்ச்சியில், நான் பார்த்ததும், பார்க்காததுமான வீடியோ காட்சிகளை ஒளிபரப்பினார்கள். இது முன்னதாகவே தெரிந்திருந்தால், என் ஊர்காரர்களை எல்லாம் அழைத்து வந்திருப்பேன். 

எதையும் சாதிக்கும் திறமை உள்ள அமைச்சர் மகேஷுக்கு, எதுவும் தெரியாதது போல் நடிக்கும் திறமையும் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையில் நச்சுப்பிடித்த விவகாரம் அதிகம் இருக்கும். சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, கையில் எந்த பேப்பரும் இல்லாமல், மள மளவென பேசினார். இதற்கு முன், நான் தான், சட்டசபையில் அப்படி பேசுவேன். எனக்குப் பின், அந்த ஆற்றலை பார்த்து, தி.மு.க.,வை வழிநடத்தும் தலைவன் ஒருவன் கிடைத்ததாக பெருமைப் பட்டேன். மூன்று தலைமுறையாக அரசியலில் வந்த அந்த மண் வாசனை அப்படி. கருணாநிதி பிறந்த ஊர் திருவாரூராக இருந்தாலும், திருச்சி தான்…. தி.மு.க.,வுக்கே திருச்சி மாவட்டம் தான் கேப்டன். இந்த கட்சி ஆட்சிக்கு போகலாம் என்று ‘பர்மிஷன்’ கொடுத்த மாவட்டமே திருச்சி தானே.

திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., கருதினார். எனக்கு அ.தி.மு.க., பிடிக்காவிட்டாலும் அந்தக் கருத்து பிடித்திருக்கிறது. இந்தியாவின் தலைநகர் ரொம்ப துாரத்தில் இருப்பதால், அவர்கள் நமக்கு அன்னியனாக தெரிகின்றனர். தலைநகர் ஹைதராபாத்தில் இருக்க வேண்டும். தமிழத்தின் தலைநகர் மத்திய பகுதியில் இருக்க வேண்டும் என்றால், திருச்சி தான் சரியான இடம். யாராவது ஒரு ஆள் வருவான். நடக்காமல் இருக்காது; நிச்சயமாக அது நடக்கும். தி.மு.க.,வை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் தான் கட்சியின் உயிர்நாடி. நம்ம கட்சிக்கு வந்த சோதனைகள் வேறு எந்தக் கட்சிக்கும் வந்திருந்தால், அந்த கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய் இருக்கும். இந்த இயக்கத்தின் மீது வீசிய புயல் இமய மலை மீது வீசியிருந்தால், அதுவே துாள் துாளாக போய் இருக்கும். 

அத்தனையும் தாங்கிக் கொண்டு இயக்கத்தை வளர்த்த தலைவருக்கு பின்னால், உறுதியாக நின்றவர்கள் தான் அடிமட்ட தொண்டன். ஒவ்வொரு தொண்டனையும் காவல் தெய்வங்களாக கருத வேண்டும்.  தமிழகத்தில், தி.மு.க., 13 ஆண்டுகளும், அதன் பின், 10 ஆண்டுகளும் எதிர்க்கட்சியாக இருந்தது. தி.மு.க., ஆட்சி செய்ததை விட வெளியில் இருந்தது தான் அதிகம். கொள்கைக்காக வெளியில் இருந்தோம். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கருணாநிதி தான் உதாரணம். கருணாநிதியை பார்த்து மெய் மறந்து நிற்பேன். ஸ்டாலினை பார்த்து ஒவ்வொன்றையும் கணக்கு போடுவேன். ஆனால், கருணாநிதியையே வீஞ்சும் அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு, அவர் பேசினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *