எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர் சிறப்பிடம் இருந்து கொண்டே இருக்கும். அதன் அடிப்படையில், கடந்த 14.02.2025 அன்று டெல்லியில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
விமான போக்குவரத்து சேவை நிறுவன அலுவலகத்தில் அதன் உயர் அதிகாரிகளை சந்தித்து, எனது திருச்சி தொகுதி விமான நிலையத்திற்கான பல கோரிக்கைகளையும் அது குறித்து முழு தரவுகளையும் முன்வைத்து ஒரு நீண்ட உரையாடலை நிகழ்த்தினேன். அதன்படி எனது திருச்சி விமான நிலையத்திற்கான கோரிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அதன் ஒரு பகுதியாக, இன்று (01.06.2025) ஒரே நாளில் திருச்சி – பெங்களூரு
தினசரி (வாரம் எட்டு முறை) விமான சேவையையும், திருச்சி – ஹைதராபாத் தினசரி விமான சேவையையும், போயிங் ரக விமானங்களோடு தனது உள்நாட்டு போக்குவரத்தை திருச்சி முனையத்தில் விரிவுபடுத்தியுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். திருச்சி விமான நிலைய வளர்ச்சி வரலாற்றில் இதுவொரு முத்தான முன்னேற்றமாக நான் கருதுகிறேன். இதற்காக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கும், அதன் அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியா – வளைகுடா இரு நாடுகளுக்கான BASA (Bilateral Air Service agreement) ஒப்பந்தத்தில் திருச்சி விமான நிலையத்தை Point of Call (POC) ஆக இன்னும் இணைக்காத இன்றைய நிலையில், இந்திய விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மட்டுமே திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிலை தொடர்கிறது. இதனால் டிக்கெட் கிடைப்பதில் சிரமங்களையும், கட்டணம் அதிகமாக உள்ளதையும் மக்கள் சிரமப்பட்டு ஏற்கின்ற நிலையில், எனது வேண்டுகோளை ஏற்று, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியிலிருந்து மும்பைக்கு விமான சேவையை கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று திருச்சி –
பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு செல்லும் தினசரி உள்நாட்டு விமான சேவையால் திருச்சியிலிருந்து எளிதில் மக்கள் பிற முக்கிய நகரங்களுக்கு பயணித்து, அங்கிருந்து வெளிநாட்டு விமானத்தில், குறைந்த கட்டணத்தில், காத்திருப்பின்றி டிக்கெட் பெற்று பயணிக்கும் வாய்ப்பை பெற முடிகின்றது.திருச்சிக்கு POC கொண்டுவரும் முயற்சியில் நான் ஈடுபட்டுவந்தாலும், அந்த ஒப்பந்தம் கையெழெத்தாகும் வரை, இதுபோல நமது திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை நிறைந்திருப்பது, உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் மக்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்திருக்கின்றது.
இதுபோல இன்னும் பல உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கொண்டுவரும். அதனால் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் பயன்பெறும். மக்கள் நல்வாழ்விற்கும் அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஒரு முக்கியமான பங்களிப்பாக அமையும். தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான எனது பணி தொய்வின்றி தொடரும். அதில், திருச்சி விமான நிலைய மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கும். அதற்காக விரைவில் டெல்லியிலுள்ள விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளை மீண்டும் சந்திக்க உள்ளேன்.
அப்போது திருச்சியிலிருந்து விவசாய பொருட்களின் ஏற்றுமதிக்கும், பிற நாடுகளுக்கு சென்று உழைக்கும் மக்களுக்குமான கோரிக்கைகளை வழங்க திட்டமிட்டுள்ளேன். மக்கள் பயன்பெறவும், அவர்களின் பொருளாதார மற்றும் வாழ்க்கைத்தரம் உயரவும் இந்த முயற்சி வழிவகுக்கும் என்று நம்புகிறேன். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments