திருச்சி மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெண்களை மானபங்கப்படுத்தல், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆகியவற்றை தடுக்கும் வகையில்,
திருச்சி மாநகரத்தில் செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர் ஆளிநர்கள் கொண்டு பெண்கள் உதவி மையம் தொடக்க விழா கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் தொடங்கி வைத்து பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் பெண் காவல் ஆளிநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பை ஆரம்பித்து வைத்தார். இதில் பெண் உதவி மையத்திற்கான 24 மணி நேரம் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 112, 181 மற்றும் 1098 என்ற எண்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
மேலும் உதவி மையத்தில் பெறப்படும் புகார்களை பாதிக்கப்பட்ட பெண்களின் இடத்திற்கு உடனடியாக சென்று தேவையான உதவிகளை துரிதமாக செய்து முடிக்க பெண்கள் உதவி மையத்திற்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 162 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 16 அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மடிக்கணினிகள் ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபட்ட பெண் காவல் ஆளிநர்களுக்கு மாநகர காவல் ஆணையர் வழங்கினார்.
தற்பொழுது காவல்துறையினர் மீது பொது மக்களுக்கும், பெண்களுக்கும் நம்பிக்கை அதிகரித்து வரும் காரணத்தினால் அவர்கள் காவல் நிலையங்களுக்கு நேரடியாக வந்து புகார் அளிக்கின்றனர். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் திருச்சி மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
Comments