Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

39,000 பேருக்கு இணைப்பு வழங்கினால் மாநிலத்திலேயே முதல் மாவட்டம் திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளினை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சிறுகனூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், சிறப்புப் பார்வையாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

இக்கூட்டத்தில் இந்த ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், வரவு, செலவு கணக்குகள் விவரம் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மக்களிடம் தெரிவித்து ஒப்புதல் பெறப்பட்டது. பல்வேறு செயல்பாடுகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்…. அரசாங்கத்தினுடைய திட்டங்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது. கிராமங்கள் வளமாக இருந்தால்தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். அதற்கு ஆதாரமாக விளங்குவது நாம் நம்முடைய கிராமத்தை சுத்தமாக வைத்திருத்தல் என்பதாகும். சாலை வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி இவை அனைத்தும் அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க செய்ய அரசு உழைத்து வருகிறது. நம்முடைய பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், நமது ஆரோக்கியம் கெடும். அதன் தொடர்ச்சியாக வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும். 

மழை காலங்களில் நாம் தேவை இல்லை என்று வெளியே வீசுகின்ற பொருட்களில் மழை நீர் தேங்கி அங்கு டெங்கு போன்ற கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனை தடுக்கும் விதமாக நாமே நம் சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசின் தூய்மை பணியாளர்கள் எவ்வளவுதான் தூய்மைப் பணிகளை மேற்கொண்டாலும், நாமும் உதவிடும் வகையில் செயல்பட வேண்டும். நாம் நமது வீட்டின் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதன் வாயிலாக குப்பையை சேகரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அதனை பிரிக்கின்ற வேலை பளு குறையும். 

கிராம முன்னேற்றத்தில் பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிராமப்புற இளைஞர்களுக்கு தொடச்சியாக கிடைப்பதன் வாயிலாக தன்னிறைவு அடையலாம். எனவே, நம்முடைய குழந்தைகளின் உடல் நலன் மிக முக்கியம் என்பதை உணர்ந்து அவர்களுக்கு சுத்தமாக இருக்கவும், குளிக்கவும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும் பழக்கப்படுத்த வேண்டும். 

குடிநீர்த் தேவையை பொறுத்தவரை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை மாநிலத்திலேயே முதல் மாவட்டமாக கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் 100 சதவீதம் இலக்கை எட்டும் வகையில் ரூபாய் 1200 கோடி மதிப்பில் செயல்படுத்தி வருகிறார். இன்னும் 39,000 பேருக்கு கூட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கினால் அது முழுமையடையும். 2024 மார்ச் மாதத்திற்குள்ளாக அப்பணி நிறைவேறும். மேலும், உங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து இக்கிராம சபைக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வையுங்கள் அதற்கான நிதியை அரசிடம் பெற்று நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரணி, மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.ஸ்ரீதர், சிறுகனூர் ஊராட்சிமன்றத் தலைவர் இந்திராணி கண்ணையன் மற்றும் வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *