தமிழக அரசு, வளர்ச்சி அடைந்த ஊராட்சிகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் ஊராட்சிகளை மாநகராட்சியாக்கும் பணிகளில் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியை மாநகராட்சி ஆக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகேயுள்ள குண்டூர் ஊராட்சியில், திருவளர்ச்சிபட்டி, ஐயம்பட்டி, அயன்புத்தூர், பர்மா காலனி என்று ஐந்து கிராமப் பகுதிகளை உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார், 7,000 வாக்காளர்கள் என, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுமார், 3,000 ஏக்கருக்கு மேல் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 500 ஏக்கர் பரப்பளவை கொண்ட ஏரிகள் மூலம் இந்த விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது.
மேலும், கால்நடை வளர்ப்பு மூலம் பால் உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. அதிகளவு, ஏழை, எளிய மக்கள், 100 நாள் வேலையை நம்பி இங்கு வாழ்கின்றனர். எனவே, குண்டூர் ஊராட்சியை, திருச்சி மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி, 500 பெண்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து, சாலை ஓரத்தில் நின்ற பொதுமக்கள், கைகளில் பதாகை ஏந்திய படியே, “திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம்” என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், ‘விவசாயம் மற்றும், 100 நாள் வேலையை நம்பி வாழும் எங்களுக்கு, மாநகராட்சி உடன் இணைத்தால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
எனவே, மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments